தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.
பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப்போராட்டங்களில் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர்.
திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:
1. இசைமணி மஞ்சரி (1970இல்)2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)3. கீர்த்தனை அமுதம் (1974இல்)4. நவமணி இசைமாலை (19880இல்).
தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்!
“தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார்.
பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்!
பத்மபூஷன்,கலைமாமணி என பல கௌரவங்களை பெற்ற இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்த இவர் தமிழ் கலைக் களஞ்சியம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.ஆனால் இவரது நூற்றாண்டை வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு கொண்டுசெல்லாதது ஏன்? என்பதுதான் புரியவில்லை.
இவரது வாழ்க்கை குறிப்பு பற்றி மேலும் அறிய
http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html
நன்றி.திரு.ஜீவா வெங்கட்ராமன் அவர்களுக்கு.