Wednesday, April 23, 2008

இதய நோய்க்கு தமிழர்களின் மருந்து

இதய நோயினாலும் மாரடைப்பு ஏற்பட்டு ரத்தம் திடீர் என்று உறைவதாலும் பலர் திடீர் என மரணத்தை தழுவுகிறார்கள்.இந்த விபரீதத்தை தடுக்கும் அதிஅற்புத மருந்து ஹெபாரின் என்பது.இந்த மருந்து உயர்ரக விலங்குகளின் சிறுகுடல்,நுரையீரலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இதன்மூலம் கிடைக்கும் மருந்தின் அளவு மிகக்குறைவானது என்பதால் அதன்விலையும் மிக அதிகமாகவே உள்ளது. 1 மில்லிகிராம் ஹெபாரின் விலை ரூ 7,600 ல் இருந்து 33 ஆயிரம் வரை தரத்துக்கு ஏற்ப உள்ளது.


ஒரு கிராம் தங்கத்தின் விலைகூட ரூபாய் 1,100 தான்.ஆனால் ஒரு கிராம் ஹெபாரின் விலை உத்தேசமாக இரண்டரைலட்சம் ஆகும்.


மனிதனின் மகத்தான உயிரை மாரடைப்பு காலங்களில் காப்பாற்றக்கூடிய இந்த மருந்தை அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்உயிரியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 10 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்து கடற்கரையில் கிடைக்கும் சிப்பிகளில் இருந்து தயாரிக்கமுடியும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


திறந்த இருதய அறுவைசிகிச்சை,இதய வால்வு மாற்று சிகிச்சை மற்றும் மாரடைப்பு காலங்களில் ரத்தம் உறையாமல் இருக்கவும் ஹெபாரினை பயன்படுத்தி வருகிறார்கள்.நமது விஞ்ஞானிகள் இந்த புதிய மருந்தை ஆட்டின் ரத்தத்திலும்,மனித ரத்தத்திலும் செலுத்தி பரிசோதித்து பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.


உலக அளவில் ஹெபாரினை உற்பத்திசெய்யும் இத்தாலியை சேர்ந்த ஓபாக்ரின் என்ற மருந்து நிறுவனத்திற்கே அனுப்பி தரத்தினை உறுதி செய்திருக்கிறார்கள்.


உலக சுகாதார நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் உலகில்உள்ள இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருப்பர் எனக்கூறியுள்ள நிலையில் இந்த கண்டுபிடிப்பு நமக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.


மீனவப்பொருளாதாரம் : இதுவரை உணவிற்காகவும், இறால் பண்ணைகளில் இறால் உணவிற்காகவும் பயன்பட்ட சிப்பிகள் வணிகரீதியாக பயன்படும்பொழுது மீனவர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்பது கண்கூடு.


இவர்கள் கண்டுபிடித்த மருந்தினில் செல்களின் பெருக்கத்தை குறைக்கும் பண்பு இருப்பதால் பற்றுநோய் மற்றும் H I V க்கு மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என ஆராய்ச்சி செய்ய உள்ளார்கள்.இவர்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துவோமாக.

1 comment:

யாத்ரீகன் said...

கேட்க மிகவும் மகிழ்ச்சியான செய்தி , இந்தியர்கள் ஆராய்ச்சித்துரையில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் எந்த நிலையில் உள்ளனர் என்ற விவாதம் நேற்று எங்கள் நண்பர்கள் மத்தியில் நடந்து கொண்டிருந்தது .. இந்த செய்தியை கேட்கையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ..

அந்த ஆராய்ச்சிக்குழுவிற்கு வாழ்த்துக்கள் ..