Tuesday, March 25, 2008

வாங்கும் பொருட்களில் மின்சக்தி சேமிப்பு

இந்திய அரசின் சக்திஅமைச்சகம் ( ministry of power) B I S போன்று B E E எனும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளது(Bureau of Energy Efficiency).இந்த அமைப்பு ப்ரிட்ஜ்,ஏர் கண்டிசனர்,டியூப்லைட் போன்றவற்றில் பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை நாம் உபயோகிக்கும்பொழுது எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கமுடியும்( elecricity consumption, energy efficiency ) என்பதை கணக்கிட்டு அவற்றுக்கு 1,2,3,4,5 நட்சத்திர அந்தஸ்து அளித்துள்ளது.அதிக நட்சத்திரம் பெறுவதன் மூலம் அதிக மின்சக்தியை அந்த பொருட்கள் சேமிக்கும் என்பதை குறிக்கும் முத்திரைகளுடன் B E E எனும் வில்லைகள் அந்த பொருட்களில் ஒட்டப்படுகின்றன.எனவே அடுத்த முறை நாம் டியூப்லைட்,ஏசி போன்றவை வாங்கும்பொழுது B E E முத்திரையையும்,எத்தனை நட்சத்திர குறியீடு உள்ளது என்பதையும் கவனித்து வாங்கினால் நமக்கும் நல்லது,நாட்டிற்கும் நல்லது.மேலும் விபரம் அறிய http://www.bee-india.nic.in/ என்ற முகவரியில் தேடலாம்.

Monday, March 24, 2008

யானையை விரட்டிய பெண்விவசாயி

கோவை அருகில் உள்ள வனங்களைஒட்டிய விவசாயநிலங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன.அதற்காக மின்வேலி,பெரிய குழிகளை தோண்டுதல் போன்றவை செய்தும் பலனளிக்கவில்லை.ஆனால்சமீபத்தில் வந்த பத்திரிக்கை செய்தியில் பெங்களூர் பானரகட்டா தேசிய வனவிலங்கு பூங்கா அருகில் உள்ள பெண் விவசாயி ஒரு எளியமுறையில் யானைகளை வரவிடாமல் தடுத்துஉள்ளார்.

கேழ்வரகு பயிர்செய்த தனதுவயலில் பயன்படுத்திய இன்ஜின்ஆயில் , மிளகாய்பொடி,புகையிலைத்தூள் மூன்றும் கலந்த கலவையில் கயிறுகளை நனைத்து வயல்வெளியை சுற்றிலும் கட்டினார்.காட்டிலிருந்து வந்த யானைகள் இந்தவாசனையை மோப்பம் பிடித்தவுடன் திரும்பிப் போய்விட்டன

என்கிறார்.ஜிம்பாவே நாட்டு விவசாயிகள் இந்தமுறையை பயன்படுத்தித்தான் வெற்றி கண்டுள்ளனர் என்கிறாரிவர்.

Saturday, March 22, 2008

நூலகங்கள் - நமது பங்கு

டி.வி,சினிமா,கிரிக்கெட்,ரசிகர்மன்றம்,அரசியல் என பல கவர்ச்சிஅம்சங்களை தாண்டி குறிப்பிடத்தக்க அளவு இளைஞர்கள் இன்றும் நூலகங்களுக்கு செல்வது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.இவர்களுக்கு உதவ,இந்த நூலகங்களை மேம்படுத்த நமக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.

தமிழகஅரசின் நூலகத்துறையில்'' புரவலர்'' என்று ஒரு திட்டம் உள்ளது.இதில் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000. நூலகங்களில் வாங்கப்படும் செய்தித்தாள்கள்,வார மற்றும் மாதஇதழ்கள் வாங்குவதற்க்கு நாம்கொடுக்கும் தொகையை சேமிப்புநிதியில் வைத்து பயன்படுத்துகின்றனர்.

நாற்காலி,மேஜை,அலமாரிகள்,மின்விசிறிகள்,மின்விளக்குகள் போன்றவை கூட வாங்கிக்கொடுக்கலாம்.அல்லது அங்கு வாங்காத நல்ல இதழ்களுக்கு ஆண்டுசந்தாவோ,ஆயுள்சந்தாவோ கட்டிவிடலாம்.

நீங்கள் கொடுக்கும் பணம் அல்லது பொருட்கள் நீங்கள் குறிப்பிடும் பெயர்களில் ( தாய்,தந்தை,மனைவி அல்லது குழந்தைகள்) அங்குள்ள தகவல் பலகையில் எழுதப்படும்.

கிராம்ப்புற நூலகங்கள் இம்மாதிரி புரவலர்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

Thursday, March 20, 2008

கண்தானம் - புதியஅடித்தளம்

சமுதாயம் எனும் லேபிளில் கண்தானம் பதியபார்வை எனும் பதிவில் நடைமுறை ஆலோசனை ஒன்றை சொல்லியிருந்தேன்.காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அரசு இப்பொழுது ஒரு திட்டத்தை அமல்படுத்த எண்ணியுள்ளது.


அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மரணம் அடைந்தாலோ,அல்லது மூளை செயல்பாடுகள் முற்றிலும் செயல் இழந்தாலோ யாருடைய ஒப்புதலையும் பெறத்தேவையின்றி அவர்களின் உடல் உறுப்புகளை அகற்றுவதற்கு ( பிற நோயாளிகளுக்கு பொருத்த)டாக்டர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு உத்தேசித்துள்ளது.


இத்திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்பதால் முதல்கட்டமாக, மரணமடையும் அல்லது மூளை செயல்பாடுகளை இழப்போரின் கண்களை பிறருக்கு பொருத்துவதை கட்டாயமாக்க உள்ளனர்.


ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இரண்டுலட்சம் பேரின் கண்தானம் தேவைப்படுகிறது.ஆனால் 15 ஆயிரம் பேர்தான் கண்தானம் செய்கின்றனர்.


எனவே இந்த திட்டம் மத, இன,ரீதியிலான உணர்வுகளை தாண்டி முனைந்து நிறைவேற்றப்பட்டால் ஒளிமயமான பாரதம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

Tuesday, March 18, 2008

நாமே மின்சாரம் தயாரிக்கலாமா ?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி.விவசாயத்துடன் பகுதிநேர பணியாக மின் மோட்டார்களுக்கு காயில் கட்டும் பணியை செய்துவருகிறார்.தனது தோட்டத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டினார்.அந்த வீட்டிற்க்கு மின்இணைப்புதர மின்வாரியம் காலதாமதம் செய்தது.உடனே இவர் தனது சொந்த அனுபவத்தை வைத்து காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்தார்.வீட்டு மாடியில் 12அடி உயரத்தில் 6 இரும்பு இறக்கை கொண்டவிசிறியை அமைத்தார்.விசிறியின் பின்பகுதியில் டைனமோவை பொருத்தி சிறியசக்கரத்தை சுழலச்செய்து மின்சாரம் உற்பத்திசெய்கிறார்.
உற்பத்தியாகும் மின்சாரம் வீட்டின் உள்ளே இருக்கும் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.50 கிலோ எடை கொண்ட இந்த காற்றாலையில் தினமும் 400முதல் 600 வாட்ஸ் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. இதன் மூலம் டியூப்லைட்,டிவி, மின்விசிறி போன்றவை நன்றாகவே இயங்குகின்றன. நன்கு காற்று வீசும் இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்க்கு தேவையான மின்சப்ளைபெற ரூ.15 ஆயிரம் போதுமானது. இரும்புஇறக்கை,பேட்டரி,இன்வெட்டர்,மின்கோபுரம் அமைத்துவிடலாம்.இதில் இருந்து நாள்தோறும் 500 வாட்ஸ் மின்உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் உள்ள மின்பற்றாக்குறையைத் தீர்க்கவும், மரபு சாரா எரிசக்தியை அனைவரும் பயன்படுத்தவும் அரசு இதுபோன்ற விசயங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

Thursday, March 13, 2008

புத்தகப்பூங்கா - ஞானாலயா

திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது துணைவியார் இருவரின் கடின உழைப்பால் உருவாகியுள்ள இந்த தனியார் நூலகம் சுமார் 50,000 க்கும் மேற்ப்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 1842 ஆம்ஆண்டின் வீரமாமுனிவரின் சதுரகராதி ,G.U.போப் எழுதிய தமிழ் இலக்கண நூல் என மிகஅரிதான நூல்கள் இங்கு உள்ளது.

நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் இந்த நூலகத்தை பயன்படுத்தி முனைவர்பட்டம் பெற்றுள்ளனர்.ஆராய்ச்சி நோக்கில் வரும் மாணவர்கள் தங்குவதற்க்கு, உணவிற்க்கு என தனிக்கட்டணம் எதுவும் இவர்கள் வசூலிப்பதில்லை.

யாரேனும் தங்களிடம் உள்ள புத்தகங்களை அன்பளிப்பாக கொடுக்க முன்வந்தால் இவர்களே நேரடியாகச் சென்று அவற்றைப் பெற்றுக்

கொள்கின்றனர்

ஞானாலயா - நூலகம்

6 ,பழனியப்பா நகர்,

திருகோகர்ணம்,

புதுக்கோட்டை. 622002

தொலைபேசி - 04322 221069

Wednesday, March 12, 2008

கன்யாகுமரிக்கு வரும் அறிவியல் ரதம்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய ரயில்வே, விக்ரம்சாராபாய் அறிவியல்மையம், இந்தோ-ஜெர்மன் அமைப்பு மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஆகியோரின் முயற்சியால் இந்தியா முழுவதும் வலம்வந்துள்ள SCIENCE EXPRESS எனும் இந்த ரயில் வரும் மார்ச் 20 முதல் 22 ந்தேதிவரை கன்யாகுமரியில் பொதுமக்கள் பார்வைக்கு வருகிறது.

16 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன்,மிக நேர்த்தியான வடிவமைப்புடன் ஒலி,ஒளி அமைப்புடன் செயல்படும் இந்த கண்காட்சி ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Bigbang,Nano cosmos என அறிவியலின் பல்வேறு பரிமாணங்களை இந்தரதம் மக்களுக்கு விளக்குகிறது.

Tuesday, March 11, 2008

கோலா நிறுவனங்களுடன் போட்டி போடும் பொடாரன்

பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவில் களம் இறங்கியவுடன் உள்ளூர் கோலி சோடா தயாரிப்பாளர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை.நடிகர்கள்,நடிகைகள்,விளையாட்டுவீரர்கள் குடித்ததை நாமும் குடிக்க ஆரம்பித்ததால் உள்ளூர் சோடா நிறுவனங்களுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது.
ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு இணையான தொகையை விளம்பரங்களுக்காக அவர்கள் செலவு செய்வதுகண்டு நமது வியாபாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளைசெய்வதோடு தங்கள்எல்லைகளை குறுக்கிக்கொண்டனர்.கறுப்புகலர்,ஜிஞ்சர் போன்றவை எங்கே சென்றன எனத்தெரியவில்லை.
ஆனால்இதையும் தாண்டி ஈரோடுமாவட்டம் காங்கயத்தில் உள்ள பொடாரன் குளிர்பான நிறுவனம் சென்னிமலை,முத்தூர்,வெள்ளகோவில், என சுற்றுப்புறங்களில் அசைக்கமுடியாத நுகர்வோர்களை பெற்றுள்ளது ஆச்சரியமான ஒன்று.
பெரியநிறுவனங்களின் சாம,பேத,தான நடவடிக்கைகளை மீறி காங்கயம் பகுதியில் அந்தநிறுவனம் முன்ணணியில் இருப்பது நம்மை மிகவும் வியப்பிற்க்கு ஆளாக்குகிறது.

Saturday, March 8, 2008

பத்மஸ்ரீ விருதை மறுத்த ஜெகநாதன்

நாகப்பட்டினம் பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருந்துவரும் இறால்பண்ணைகளுக்கு எதிராக அறவழியில் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர் ஜெகநாதன்தம்பதியினர்.ஆனால் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நீதிமன்றமும் இறால் பண்ணைகளை நெறிப்படுத்த ஆணைபிறப்பித்தது.ஆனால் அன்றைய மத்தியஅரசோ அதை நடைமுறைப்படுத்தவில்லை.தொடர்ந்து வந்த காலங்களில் மத்தியரசு இவரது சுதந்திரகால போராட்ட தியாகங்களையும்,சர்வோதய கொள்கைகளையும் கௌரவிக்க பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது.ஆனால் இறால்பண்ணை தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத அரசு கொடுக்கும் இந்தவிருது எனக்குவேண்டாம் என மறுத்துவிட்டார்.

மகளிர்தினப் பதிவு - பெண்ணின் வெற்றி

1968 ஆம்ஆண்டு கூலிஉயர்வு கேட்ட தலித்மக்கள் 44 பேர் வெண்மணிகிராமத்தில் எரித்து கொலை செய்யப்பட்டபோது கொதித்து எழுந்தவர்தான் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தம்பதியினர்.





நாகப்பட்டினம் கூத்தூர் பகுதியில் இவர் ஆரம்பித்த லாப்டி இயக்கம் ( LAND FOR TILLERS FREEDOM ) இதுவரை 10,000 ஏக்கர் நிலங்களை அகிம்சை வழியில் நிலச்சுவான்தார்களிடம் இருந்து மீட்டு ஏழைமக்களுக்கு சொந்தமாக்கி உள்ளது.குடிசைவாழ் மக்களுக்காக 5000 ஓட்டுவீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார். 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்துவரும் இவரது பணியைப் பாராட்டி அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.





இவரது சாதனைகளுக்கு பின்புலமாக இருப்பவர் இவரது கணவரும்,சுதந்திரப்போராட்ட வீரருமான திரு. ஜெகநாதன் அய்யாஅவர்கள்.

மகளிர் தின பதிவு - மெய்யான அழகி


பத்மஸ்ரீ. கிருஷ்ணம்மாள்ஜெகநாதன் ( 82 )



ஆடையும்,ஒப்பனைகளும் அழகை வெளிப்படுத்துவதை விட அவர்தம் குணங்களும்,கடைபிடிக்கும் கொள்கைகளுமே ஒருவரை அழகாக மாற்றுகிறது.

Tuesday, March 4, 2008

கொங்கு வட்டார வழக்கு

கொங்குவாசல் பதிவு படித்தவுடன் நாமளும் ஒரு பதிவ போடனும்னு நாகரீகம் கருதி மறந்த வார்த்தைகளை தொழாவி புடிச்சேன்.
1.வெத்தல பாக்கு மாத்தறது
2.உப்புச்சக்கர வாங்கறது -இரண்டும் திருமண நிச்சயத்தின்போது நடப்பது
3.அருமக்காரர் -கல்யாணவீட்டில் சீர் செய்பவர்
4.துப்புட்டு, ரட்டு - போர்வை
5.இடால் - வயலில் பயன்படும் எலிப்பொறி
6.ராந்தல் - அரிக்கேன் விளக்கு
7.கவக்கோல் - Y வடிவ குச்சி

இருளிலிருந்து ஒளிக்கு

கண்தானம்-தெரிந்துகொள்ளவேண்டியவை.
1.கண்தானத்தில் தானம் கொடுப்பவரின் ஆயுள் முடிந்து 6 மணிநேரத்திற்க்குள் கண்கள் எடுக்கப்படவேண்டும்
2.கண்ணாடி அணிந்தவர்கள்,காடராக்ட் புரை உள்ளவர்களும் கூட கண்தானம் செய்யலாம்.
3.கண்கள் தூசியற்றதாகவும்,தூய்மையாகவும் இருக்க கண்களை மூடி ஈரபஞ்சை வைத்து கட்டிவைக்கவும்
4.கண்களை எடுக்க தனிஅறை தேவை இல்லை. பத்துநிமிடம் போதும்
5.கண்களை எடுப்பதால் எவ்வித குறையோ மாற்றமோ இருக்காது.
6.செயற்க்கை கண்கள் அப்போதே பொருத்தப்படும்.