Saturday, August 23, 2008

வெகுஜன ஊடகங்கள் மறந்த ஒரு மாமனிதர்

தமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.

பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப்போராட்டங்களில் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர்.
திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது ‘முருகா, முருகா’ பாடலும் இடம்பெற்றது.
இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:
1. இசைமணி மஞ்சரி (1970இல்)2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)3. கீர்த்தனை அமுதம் (1974இல்)4. நவமணி இசைமாலை (19880இல்).

தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்!
“தமிழ் கலைக் களஞ்சியம்” என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார்.
பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் ‘பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு’ என்கிற தலைப்பில்!

பத்மபூஷன்,கலைமாமணி என பல கௌரவங்களை பெற்ற இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மஞ்சக்காட்டுவலசு எனும் ஊரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிறந்த இவர் தமிழ் கலைக் களஞ்சியம் வெளிவர முக்கிய பங்காற்றியவர்.ஆனால் இவரது நூற்றாண்டை வெகுஜன ஊடகங்கள் மக்களுக்கு கொண்டுசெல்லாதது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

இவரது வாழ்க்கை குறிப்பு பற்றி மேலும் அறிய

http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html

நன்றி.திரு.ஜீவா வெங்கட்ராமன் அவர்களுக்கு.

Sunday, August 17, 2008

நான் ரசித்த நிழல்நடனம்



நன்றி திரு.பிரேம்ஜி

Thursday, August 14, 2008

சுதந்திர தினம்

சுதந்திரதினம்-டிவி இல்லாமல்August 13, 2008 – 9:11 pm
நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய கடிதம் இது. வாசகர் கவனத்துக்காக.
இமையம் யூத் அஸோஷியேஷன் இணைந்த கரங்கள் நற்பணி இயக்கம் இளைய ஆணிகள் பசுமை பாரதம் 18-f, ECM lay out, SKC Road., Erode Ph. 9842771700, 9865916970. அன்புடையீர், நாங்கள் ஈரோட்டை மையமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ சமூகப்பணி இயக்கங்கள். கடந்த நான்கு வருடங்களாக எங்கள் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நாட்களில் தொலைக்காட்சிப்பெட்டிகளை அணைத்துவிடும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறோம். அதேபோல தொலைக்காட்சி நிறுவனங்களிடம் அந்த நாட்களிலாவது உணர்வுகளை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகளான திரைநட்சத்திர பேட்டிகள் திரை செய்திகள் போன்றவற்றை தவிர்க்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். திரைநட்சத்திரங்கள் திரைப்பணியாளார்கள் போன்றோரிடமும் அந்நாட்களில் பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யவேண்டாம் என்றுசொல்லிவருகிறோம்.
இந்த நாட்களிலாவது வெறும் பொழுதுபோக்கை தவிப்பது என்ற பொறுப்பு ஊடகங்களுக்கு தேவை என்பது எங்கள் எண்ணம். பொதுமக்களிடம் இருக்கும் இந்த மேலோட்டமான மனப்பான்மை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்நாட்களை வெறும் விடுமுறைநாட்களாக மட்டுமே காணும் மனநிலையாகும். இந்த நாட்டில் நடந்த விடுதலைப்போராட்ட வரலாற்றை இளையதலைமுறை முழுமையாகவே மறக்கும் நிலைக்கு நாட்டை இது கொண்டுசெல்லும்.
இதை உங்கள் இணையதளங்களில் பிரசுரியுங்கள். உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள் இச்செய்தி கூடுமானவரை அதிக மக்களிடம் சென்று சேரட்டும். விடுதலைநாளை பயனுள்ள வழிகளில் செலவழிப்போம். அந்த நாளில் நம் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் எதையாவது செய்வோம். குறைந்தது நாட்டைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்
அன்புடன்
கிருஷ்ணன்செயலாளர்இமையம்
பிறநிறுவனங்களுக்காகவும் கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
கட்டுரை குறித்த கருத்துக்களை jeyamohan.writer@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

Tuesday, August 5, 2008

பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

இன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மாமன்னன் இராசராசன் பரிசு - 2008 விருதுத்தொகை :ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் மற்றும் சான்றிதழ்.# புதினம்,கவிதை,நாடகம்,கலையழகு மிளிரும் உரைநடை ஆகியன பரிசுக்குரியன. #01.07.2007 முதல் 30.06.2008 நாளுக்கு முன் வெளியீடானவை.#நூலின் ஆசிரியர் எந்நாட்டவராகவும் அமையலாம்.#எவர் வேண்டுமானாலும்,குறித்த பரிந்துரைப்படிவங்களில் தங்கள் முன்மொழிவை அனுப்பிவைக்கலாம்.படிவங்களைப் பதிவாளர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்-613 010 என்ற முகவரிக்கு ரூ 10 அஞ்சல் தலை ஒட்டிய தன்முகவரி உறை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.#படிவம் கிடைக்காவிடில் பரிந்துரையாளரின் முகவரி,பரிந்துரைத்த ஆசிரியரின் முகவரி,இலக்கிய வாழ்வுப்பணி பற்றிய குறிப்பு,நூற்பெயர்,நூற்சிறப்பு,இலக்கிய உலகில் நூலின் தகவு,பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதாயின் அதன் விவரம்,ஆசிரியரின் பிறநால்கள் முதலிய சிறப்புச்செய்திகளைக் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கலாம்.# பரிந்துரை அனுப்பும் நிறை நாள் : 17.9.2008. எனவே நண்பர்கள் அனைவருக்கும் இத்தகவலை பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, August 2, 2008

தீரன் சின்னமலை

இன்று ஆடிப்பெருக்கு.நதிகளில் வெள்ளம் 18 படிகளை தொட்டுச்செல்லும் நாள்.இந்த நாளில் நினைவுகூறப்படுவர் தீரன் சின்னமலை.ஆங்கிலேயர்கள் கொங்குநாட்டில் காலூன்றி வரிப்பணம் வசூல்செய்து கொண்டுசெல்லும்போது எங்கள் பணத்தை உனக்கு எதற்கு கொடுக்கவேண்டும் ? என வசூல்செய்த அனைத்தையும் பறிமுதல் செய்தார்.உயரதிகாரிகள் கேட்டால் என்ன சொல்வது? என வரிவசூல் செய்தவர் கேட்டபோது '' சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை பிடுங்கிக்கொண்டான் என்று போய்ச்சொல் '' என்று அனுப்பிவைத்தார். 1801 ன்றாம் ஆண்டு தொடங்கி இவர் நடத்திய மூன்று போர்கள் ஆங்கிலேயர்களால் மறக்கமுடியாதவை.மருது சகோதரர்களுடன் நட்புகொண்டிருந்தார்.குறுநிலமன்னர்கள் படைகளை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் போராடியபோது இவர் முதன்முதலாக மக்களையும் வெள்ளையர்களுக்கு எதிராக போராடவைத்தார்.இவரது கொரில்லா போர்முறையை தாக்குபிடிக்கமுடியாத கிழக்கிந்திய கம்பெனி தந்திரமாக இவரது சமையல்காரனை விலைக்குவாங்கி எந்தநேரமும் ஆயுதத்தோடு இருப்பவரை உணவு உண்ணும்போது நிராயுதபாணியாக இருக்குமாறு செய்து அதன்பின் கைதுசெய்தது.அடிபணிந்து போகமாட்டேன் என்று கூறியதால் ஒரு ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்களால் வீரமரணம் அடைந்தார்.

குறிப்பு: இவரது சிலை கிண்டியில் உள்ளது.