Saturday, June 21, 2008

M.S .உதயமூர்த்தி

1990 களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர் டாக்டர் உதயமூர்த்தி அவர்கள்.தன்னம்பிக்கை பற்றிய அவரது புத்தகங்கள் அனைவரும் படிக்கவேண்டியவை.எம்.ஜி.ஆர்,கலைஞர் இருவருடன் நல்ல நட்பு கொண்டிருந்தாலும் அதைவைத்து தனக்கென ஆதாயம் தேடிக்கொண்டதில்லை.1988 ல் இவரால் துவங்கப்பட்ட '' மக்கள் சக்தி இயக்கம் '' நதிகள் இணைப்பை வலியுறுத்தி 1991 ல் நடத்திய நடைபயணம் வரலாறு அறிந்த விஷயம்.

அவரது கொள்கைகளை வலுப்படுத்தும் வகையில் இளைஞர் குழு ஒன்று மக்கள் சக்தி இயக்கத்தையும்,மாத இதழான '' நம்பு தம்பி நம்மால் முடியும் '' புத்தகத்தையும் புதிய பொலிவுடன் கிராமங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இவர்களுக்கு தார்மீக ஆதரவு அளிக்க விரும்புவோர் அணுக முகவரி;

மக்கள் சக்தி இயக்கம்,திருவான்மியூர்,சென்னை.

044-24421810.www.makkalsakthi.org

Wednesday, June 11, 2008

பசுமை மனிதன்

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எர்த் மேட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு சுற்றுசூழலுக்காக பாடுபடுபவர்களுக்கு ஆண்டுதோறும் '' சுற்றுச்சூழல் போராளி '' ( Eco Warrior ) எனும் விருதினை வழங்கிவருகிறது.

கோவையை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் யோகநாதன்.பள்ளியில் படிக்கும் பொழுது இயற்கையை ரசிக்க ஆரம்பித்த இவர் 1980ஆம் ஆண்டு முதல் மரங்களை நடும்பணியை துவக்கி இதுவரை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை செய்துள்ளார்.

பள்ளி மாணவ மாணவியரிடம் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இதுவரை 1687 பள்ளிகளில் '' ஸ்லைடு ஷோ '' நடத்தியுள்ளார்.மரம் வளர்வது எப்படி?காற்றும் தண்ணீரும் உருவாகும் முறை , அசுத்தக் காற்றை மரங்கள் தூய்மைப்படுத்தும் விதம் போன்றவை விஞ்ஞானபூர்வமாக இந்தகாட்சியில் விளக்கப்படுகின்றன.

இதன் பயனாக 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதில்லை என மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.மேலும் இவரது பேருந்தில் பயணம் செய்யும் மாணவ மாணவியரை பசுமை நேசிப்பாளராக மனம் மாற்றியுள்ளார்.

எனவே இவரது சேவையை பாராட்டி எர்த் மேட்டர்ஸ் அமைப்பு கடந்த 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி அவர்கள்மூலம் எக்கோவாரியர் விருதினை வழங்கி பெருமைப்படுத்தியது.இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 நபர்களில் கண்டக்டர் யோகநாதன் வரிசையில் இந்திநடிகர்,பிரபல மாடலிங் ஜான்ஆபிரஹாமும் ஒருவர்.