Saturday, September 6, 2008

தமிழர் நாகரிகச் செழுமை

தமிழர்தம் நாகரிகம் எவ்வளவு மேன்மையுற்று இருந்தது என்பதை ஆன்மீக இலக்கியங்களை எந்த விருப்புவெறுப்பும் இல்லாமல் படித்தோமானால் தெரிந்து கொள்ளமுடியும்.சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சிறுத்தொண்டர் என்ற சிவபக்தர் கதை ஒன்று வருகிறது.அதில் ஒரு பாடல்.


பரிசு விளங்கப் பரிகலமும்


திருத்திப் பாவாடையில் ஏற்றித்


தெரியும் வண்ணம் செஞ்சாலிச்


செழும்போ னகமும் கறியமுதும்


வரிசை யினில்முன் படைத்தெடுத்து


மன்னும் பரிக லக்கால்மேல்


விரிவெண் துகிலின் மிசைவைக்க


விமலர் பார்த்துஅங்கு அருள்செய்வார்


பரிசு -இயல்பு, பரிகலம் - உண்கலம், பாவாடை - பரப்பிய ஆடை, சாலிச்செழும்போனகம் - சம்பா அரிசிச்சோறு, பரிகலக்கால் - முக்காலி போன்று அமைந்துள்ள உணவு வைத்து உண்ணும் ஆசனம்.


நல்லியல்பின் விளங்க உண்கலத்தை விளக்கி அதனை ஒரு பரப்பிய துணியின் மீது வைத்து அமுதவகைகள் நன்கு தெரியும்படி செழுமையான சாலிநெல்லரிசிச்சோறும் கறிவகைகளும் வரிசையாகப் படைத்துச் சிறப்பின்மிக்க அப்பரிகலத்தை நிலையான முக்காலியின் மீது வெண்துகில் பரப்பி அதன்மீது வைக்க ஆங்கு அடியவர் அவற்றைக்கண்டு உரைக்கலானார்.


சேக்கிழாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு எனக் கூறப்படுகிறது.அப்போதே டைனிங்டேபிளின் மேல் துணியை விரித்து உணவு பரிமாறும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதிலிருந்து தமிழர் நாகரீகம் எவ்வளவு செழுமையானது என்பதை அறியமுடிகிறது.

Friday, September 5, 2008

கல்வெட்டுகள் - வரலாற்றின் படிக்கட்டுகள்

வரலாறு என்பது ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல.அசைக்கமுடியாத அடிப்படை சான்றுகளை கொண்டு எழுதப்படுவது.அந்த அடிப்படை ஆதாரங்களே கல்வெட்டுகள்.

கி.பி.1000த்தில் தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ராஜராஜ சோழன் என்பதை நாம் கல்வெட்டுகள் மூலமாகத்தான் அறிந்தோம்.இதுபோல் தமிழகத்தில் பல்லாயிரம் ஊர்களின் வரலாற்றை கல்வெட்டுகள் வாயிலாகத்தான் அறிந்தோம்.

லண்டனில் நடைபெற்ற பத்தூர்கோவில் நடராஜர் சிலைவழக்கில் நீதிபதி , கல்வெட்டு நிபுணர் திரு.நாகசாமி அவர்களிடம் புத்தூர் கோவிலின் காலம் என்ன? தமிழ்நாட்டு சிலைகளின் காலத்தை எவ்வாறு கணிக்கிறீர்கள்? அவை உண்மையான சான்றுகள் என எவ்வாறு நிரூபிப்பீர்கள்? என கேள்வி கேட்டார்.

அப்போது பத்தூர் கோவிலின் கல்வெட்டுகளை எடுத்துக்கூறி சிலைகளின் காலத்தைக்கணிக்கும் கல்வெட்டுகளின் தன்மையையும் எடுத்துக்கூறினார்.அந்த சான்றுகளைப் பார்த்துவிட்டு நடராஜர் சிலை கோவிலுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என தீர்ப்புக்கூறினார்.

இப்போது படிக்க இருப்பவையே 40 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள்.ஆனால் தொல்லியல்துறையில் கல்வெட்டுநிபுணத்துவம் பெற்றவர்களோ நான்குபேர் மட்டும்தான்.

கடந்த 40 ஆண்டுகளில் திருப்பணிக்காக அழிக்கப்பட்ட கல்வெட்டுகளோ ஏராளம். இன்றைய தலைமுறைக்கு நமது கலை தெரியாது, கட்டிடம் தெரியாது,கல்வெட்டு தெரியாது,வரலாறு தெரியாது.இப்படியிருந்தால் தமிழின் தொன்மையை,தமிழகத்தின் சிறப்பை,கலை மற்றும் கலாச்சாரத்தை,நாகரீகத்தை,பண்பாட்டை உலகத்திற்கு நாம் எவ்வாறு தெரியப்படுத்துவோம்? என வினவுகிறார் கல்வெட்டுநிபுணர் டாக்டர் திரு.ஆர்.நாகசாமி.